கலைந்துபோன கனாக்கள்
A Tamil poem about lost dreams and Diwali memories.

கலைந்துபோன கனாக்கள்,
காலம் கடந்தும் களவாடுகின்றன
கண்ணீர் துளிகளை
கண்ணிமையும் கைகோர்க்க…
மழைத்துளியா, மலர்மனமா !
மலர்ந்த மறுகணமே மறைந்துசெல்ல?
மண்ணில் விதையாய்வூன்றி
மரமாய் மனதில் நீ நிற்க…
இமயம் கடந்திருந்தாலும்,
இரவு கடப்பதிற்குள்
இல்லம் சேர்ந்திருப்போம்
இன்முகங்கள் காத்திருக்க..
புத்தாடையுடன் பட்டாசு புகைசூழ
படைகொண்டோம் வீதிகளை,
படையல் கொண்டோம் வீட்டினிலே
புன்னகையாய் பூத்திருக்க…
இன்று தீபஒளி திருநாளாம்
இல்லை நீயோ, தீபஒளியோ இப்பொழுது
இதை ஏற்க மறுக்குது என்மனது
இர்ரணம் அதைச் சூழ்ந்திருக்க..
கண்ணாடிப் பேழைக்குள் நீ
கண்மூடி உறைந்த கணமும், கடைசியாய்
கட்டித்தழுவிவும் முடியா ஏக்கமும்
கண்ணீரினை கரைத்தெடுக்க..
என் சிந்தையெல்லாம் செழித்திருக்கும்
எந்தையே, இந்நாளையும் இனிவரும்
என்நாளையும் எப்படி கடந்திடுவேன்
என் வழிஓளி இருண்டிருக்க..